‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறே இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறே இல்லை’ என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் செய்துள்ளது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ‘எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்?’ என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதேப்போன்று செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று 28ம் தேதி விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ‘அரசியல் சட்ட பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டும்தான் ஆளுநர் செயல்பட முடியும். அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை.

ஒரு மாநிலத்தின் ஆளுநரோ அல்லது குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என அரசியல் சட்டம் கூறுகிறது.

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எவ்வித தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்ந்தெடுத்த வாக்காளர்களால் நீக்க முடியாத மக்கள் பிரதிநிதியை நீதிமன்ற வழக்கு மூலம் நீக்க முடியாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.எல்.ஏ-க்களை விட அமைச்சர்கள் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். எம்.எல்.ஏ-க்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். அமைச்சர்கள் 76 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் பெறுகின்றனர். இதனால் அவர்களுக்கு பயண சலுகைகள் உள்ளன.

எனவே இந்த ரிட் மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக செயல்பட முடியாது. ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது’ என வாதிட்டார்.

அப்போது எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், ‘அமைச்சரவை ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்கு உள்ளது.

அதுபோன்ற சூழல் நிலவுகிறதா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டும். சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

அதேப்போன்று செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்ட விதிகளின்படிதான் ஆளுநர் செயல்பட்டுள்ளார்’ என வாதிட்டார்.

இதன் பிறகு ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, ‘சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது. எனவே அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன்னுடைய கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு சட்ட அதிகாரம் இல்லை என்று ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது’ என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com