மும்பையில் பதுங்கிக் கொண்டு கோவை கூலிப்படையினருக்கு உதவி செய்யும் ’டில்லி’யை பிடிக்க மும்பைக்கு பறந்திருக்கிறது கோவை சிட்டி போலீஸ்.
- என்ன, வாசிச்சா தலை சுத்துதா? க்ரைம் ரேட் மிக குறைவான கோவை சிட்டியில் கடந்த சில மாதங்களாக கிரிமினல்கள் ஆட்டம் அதிகமாகி கொண்டுள்ளது. பொது வெளியில்,
பட்டப்பகலிலேயே கொலைகள், கொலைவெறி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதைப் பற்றியும், இதைத் தடுக்க போலீஸ் எடுக்கும் தீவிர முயற்சிகள் பற்றியும் நமது குமுதம் டிஜிட்டல் தளம் தொடர்ந்து விரிவாக எழுதிக் கொண்டுள்ளது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போலவே கோவை கிரிமினல்களிடம் அதிகமான பணப்புழக்கத்துக்கு கஞ்சா விற்பனைதான் காரணமாக போலீஸ் கண்டறிந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் துவங்கி வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து பணத்தை வாரி குவிக்கின்றனர் கிரிமினல்கள். இந்த பணத்தை வைத்து வெளிநாட்டு துப்பாக்கியை கள்ள மார்க்கெட்டில் வாங்குமளவுக்கு அவர்களின் கை நீண்டிருக்கிறது. ஆக சூழல் இப்படியெல்லாம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து கிரிமினல்களை வேட்டையாடி கைது செய்து கொண்டிருக்கும் போலீஸ், இவர்களுக்கு பின்னே ஒரு சிலர் இருந்து இவர்களை ஒருங்கிணைப்பதை ஸ்மெல் பண்ணினர்.
தீவிர விசாரணையில் அந்த நபர் யாரென்பதையும் கண்டறிந்துள்ளனர். அவர் பெயர் ‘டில்லி’.என்னடா இது லோகேஷ் கனகராஜின் கைதி பட ஹீரோ பெயர் ரேஞ்சுக்கு
செம்ம பில்ட் அப்பா இருக்குதே! என்று நீங்கள் ஜெர்க் ஆகலாம். ஆக்சுவலா இந்த டில்லி, கேரளாவை சேர்ந்தவராம். கொலை செய்வோர், கொலையல்லாமல் ஜஸ்ட் வெட்டு குத்துக்களில் ஈடுபடுவோர், கஞ்சா விற்பனையாளர்கள் போன்ற அனைத்து வகை சமூக விரோதிகளுக்கும் பணம் முதலாக பல வகைகளில் உதவிகள் செய்து தனது கட்டுக்குள்
வைத்திருப்பது இந்த டில்லியின் வழக்கமாம். தமிழகத்தில் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் செல்லும் கிரிமினல்களுக்கு மும்பை உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் அடைக்கலம் தருவதும், ஒருவேளை கைதானால் அவர்களை ஜாமீனில் எடுக்க வக்கீல் ஏற்பாடு செய்வது என்று கிரிமினல்களுக்கு டில்லி ஆற்றும் தொண்டுகளெல்லாம் அளப்பரியது என்கிறார்கள்.
இப்படி கிரிமினல்களை தன் கைகளில் வைத்துக் கொண்டு பெரிய அளவிலான கொலை, போதைப்பொருள் கடத்தல் போன்ற மெகா ப்ராஜெக்ட்களுக்கு அவர்களை பயன்படுத்துவாராம்.
இதன் மூலமாக இவருக்கு மாதாமாதம் பல லட்சங்கள் சம்பாதிக்க முடிகிறதாம். தற்போதைக்கு மும்பையில் மறைந்து வாழ்வதாக சொல்லப்படும் இந்த டில்லியை பிடிக்க மும்பையில் முகாமிட்டிருக்கிறது கோவை சிட்டி போலீஸ். பிடிங்க சார் பிடிச்சு அந்தாளை உள்ளே போடுங்க.
-ஷக்தி