கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிக்கை விடுத்தவர்கள் மீது, தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், ஓசூர் நகர பா.ஜ.க தகவல் தொழில் நுட்பப் பிரிவை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒசூர் மாநகராட்சி மலை மீது அமைந்துள்ளது அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் திருக்கோவில். 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோயில் ஆகும்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் ரோஜா மலர் தூவி, 11 நதிகளின் புனித நீர் தெளித்து, மிகப் பிரம்மாண்டமான முறையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்தவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதனால், ஆவேசம் அடைந்த பா.ஜ.கவைச் சேர்ந்த சிலர், தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், மாரிமுத்து உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, பா.ஜ.க. மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ஓசூர் நகர பா.ஜ.க தகவல் தொழில் நுட்பப் பிரிவை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் பார்வதி நகரை சேர்ந்த வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடைய பா.ஜ.க வைச் சேர்ந்த முருகன், ஆதி மற்றும் வி.எச்.பி. நிர்வாகி கிரண் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.