தமிழ்நாடு: 221 கடன் செயலிகள் முடக்கம் - சைபர் க்ரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை

இது மாதிரியான கும்பல்கள், கொடுத்த பணத்தை விட அதிக பணத்தை கேட்டு மிரட்டி வருவதால் தற்கொலைகள் பலவும் நடக்கின்றன.
தமிழ்நாடு: 221 கடன் செயலிகள் முடக்கம் - சைபர் க்ரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கிய 221 கடன் செயலிகளை ‘சைபர் கிரைம்' போலீசார் நீக்கம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருக்கும் 386 அவதூறு வீடியோக்களையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் கடன் செயலிகள் மூலம் மோசடி செய்யும் கும்பல்கள் பல செயல்பட்டு வருகின்றன. இது மாதிரியான கும்பல்கள், கொடுத்த பணத்தை விட அதிக பணத்தை கேட்டு மிரட்டி வருவதால் தற்கொலைகள் பலவும் நடக்கின்றன. மேலும் பல சைபர் கிரைம்களும் இதனால் அரங்கேறி வருகின்றன.

சமீப காலங்களாக ஸ்மார்ட் போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பலர் கவர்ச்சியான விளம்பரங்களால் உள்ளிழுக்கப்பட்டு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு சைபர் கிரைம் போலீசாரால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் இயங்கும் மேலும் 61 கடன் செயலிகளை நீக்குவதற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் தேவரானி, ஸ்டாலின், அசோக்குமார் ஆகிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், உள்ளிட்ட பதிவுகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரையில் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்டிருந்த 40 சட்டவிரோத பதிவுகள் மற்றும் கருத்துகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்ததின் பேரில் அவை நீக்கப்பட்டன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி 386 அவதூறு 'வீடியோ' பதிவுகள் இருப்பதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த 'வீடியோ' பதிவுகளை நீக்க என்று 'யூடியூப்' நிறுவனத்துக்கு 'சைபர் கிரைம்' போலீசார் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com