'மானியம் வேணும்னா லஞ்சம் கொடுக்கனும்' - கறார் காட்டி மாட்டிக் கொண்ட தாட்கோ மேலாளர்

பட்டியல் போட்டு வசூல் செய்யும் சாந்தி அன் கோ
சாந்தி
சாந்தி

மானியம் வேனுன்னா லஞ்சம் கொடுக்கனும் என கறார் கட்டி வசூல் செய்த தாட்கோ மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தாட்கோ மேலாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பெத்தநாயக்கன்பளையம் பக்கத்திலுள்ள பெரியகுட்டி மடுவு கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் மானியத்தில் டிராக்டர் கேட்டு விண்ணப்பித்து உள்ளார்.

ஆவணங்களை சரிபார்த்த மேலாளர் சாந்தி, லோன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். தனியார் வங்கியில் 7 லட்சம் ரூபாயிக்கு மேல் சேங்சன் ஆகி இருக்கிறது.

இதில், அரசு கொடுக்கும் மானியம் 50 சதவீதம். இந்த மானியத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என குமாரிடம் சாந்தி 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஐடியாபடி ரசாயனம் தடவிய நோட்டுக்களை சாந்தியிடம் கொடுக்க போயிருக்கார் குமார்.

மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தியிடம் லஞ்சப் பணம் கொடுக்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் பேசினோம். ' தாட்கோ மேலாளர் சாந்தி மேல் ஏகப்பட்ட புகார்கள் வந்தது. ஆதாரங்களோடு இல்லமால், கடிதமாகவே வந்தது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள்தான் கஷ்டத்துக்கு லோன் கேட்டு வருவாங்க. அவங்ககிட்ட பணம் வாங்கிட்டுத்தான் கையெழுத்து போடுவேன்னு அடம் பிடிச்சிருக்காங்க.

மின் மோட்டர் வாங்க ரூ 5,000 -மும், விவசாய நிலம் லோன் வாங்க ரூ 20,000 -மும் என்று பட்டியல் போட்டு வசூல் செய்துள்ளார் சாந்தி. இவருக்கு ஆல் இன் ஆல் வசூல் வேட்டையில் உதவியவர் உதவியாளர் சாந்தி.

ரெண்டு பேரும் சேர்ந்துதான் பஸ் ஸ்டாண்ட் வர சொல்லி லஞ்ச பணத்தை வாங்குவங்களாம். இந்த முறை குமார் கிட்ட கொஞ்சம் ஏமாந்து அலுவலகத்திலே மாட்டிகிட்டாங்க. மேலாளர் சாந்தியின் சொத்து மதிப்பை பத்தி விசாரித்து வருகிறோம்.' என்றார்கள்.

- பழனிவேல்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com