எஸ்.வி சேகர் மீதான வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் இல்லை- உச்சநீதிமன்றம் உத்தரவு

விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தள்ளுபடி
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பாஜக பிரமுகரான எஸ்.வி சேகர் மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டதாக, எஸ்.வி.சேகருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏவான எஸ்.வி சேகர் மீதான இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதுடன், தனது செயலுக்கு எஸ்.வி.சேகர் முகவும் வருத்தம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், எஸ்.வி. சேகருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் தலையிட முடியாது. விசாரணையை தொடர்ந்து நடத்தலாம். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை எப்படி திரும்ப பெற முடியாதோ? அதேபோல ஒருமுறை ஒருவர் தெரிவித்த கருத்துக்களை தவறானது என்றாலும் திரும்ப பெற முடியாது.

ஒரு கருத்தின் விளக்கமும், அர்த்தமும் தெரியாமல் யாருக்கும் அனுப்பவோ? பகிரவோ? முடியாது. நீதிமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததால் தேசிய கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது.

பெண் பத்திரிக்கையாளர் குறித்து கருத்து தெரிவித்ததற்கான விசாரணையை சிறப்பு நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும். விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.வி சேகர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.வி சேகர் மனுவை தள்ளுபடி செய்ததுடன், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சிறப்பு நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், எஸ்.வி சேகர் மீதான வழக்கை விசாரிக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com