மனைவி நடத்தையில் சந்தேகம்: போதையில் மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தை

மனைவி பக்கத்து வீடுகளில் அதிக நேரம் பேசிக்கொண்டு இருப்பதால் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
கொலை செய்த தந்தை
கொலை செய்த தந்தை

மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக குடிபோதையில் பெற்ற மகனை கிணற்றில் வீசிக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள தென்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி( 45 வயது), இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி பெயர் கார்த்தீஸ்வரி( 40 வயது). இவர்களின் ஒரே மகன் மகிழன் 6 வயது, அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 22ம் தேதி மதியம் 3 மணி இருக்கும், முனியாண்டி தனது மோட்டார் சைக்கிளில் மகிழன் படிக்கும் பள்ளிக்கு வந்தார். ஒரு திருமண விழாவிற்கு மகிழனை கூட்டிச்செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் சொன்னதால் அவர்கள் மகிழனை முனியாண்டியுடன் அனுப்பி வைத்தனர்.

மாலை 4.30 மணி ஆனதும் மகிழன் வீடு திரும்பாததால் தாயார் கார்த்தீஸ்வரி பள்ளிக்குச்சென்று விசாரித்திருக்கிறார். அப்போது ஆசிரியர்கள் முடியாண்டி வந்து மகனை கூட்டிக்கொண்டு சென்றதாய் கூறினர். இதனால் சமாதானம் அடைந்த கார்த்தீஸ்வரி வீடு திரும்பியிருக்கிறார்.

இரவு 9 மணிக்கு முனியாண்டி மட்டும் தனியாய் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் நல்ல போதையில் இருந்திருக்கிறார். மகிழன் எங்கே என்று கார்த்தீஸ்வரி கேட்க, தெரியாது என்று பதில் சொல்லியிருக்கிறார் முனியாண்டி. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்தீஸ்வவரி உடனடியாய் சிவகிரி போலீசில் புகார் செய்திருக்கிறார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.குறிப்பாக முனியாண்டியை போலீஸ் முறைப்படி விசாரிக்க அவர் நான்தான் என் மகனை கிணற்றில் வீசிக்கொன்று விட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஜான்சன் நம்மிடம் கூறுகையில், ”முனியாண்டி ஒரு பெயிண்டர், காலையில் போனால் இரவுதான் வீடு திரும்புவார்.இரவில் வீடு திரும்பும் போது அவரது மனைவி கார்த்தீஸ்வரி வீட்டில் இல்லாமல் பக்கத்து வீடுகளில் பேசிக்கொண்டிருப்பாராம். இதனால் அவரது நடத்தையில் முனியாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் டென்சனான முனியாண்டி மகன் முகிலனை அழைத்துக்கொண்டு புளியங்குடி டாஸ்மாக்கில் சரக்குகளை வாங்கிக்கொண்டு ஒரு தனியார் தோப்பில் வைத்து தண்ணி அடித்திருக்கிறார்.ஒவர் போதையில் மகிழனை கிணற்றில் வீசிக்கொலை செய்திருக்கிறார். போதையில் இப்படி செய்து விட்டேன்” என்று கூறுகிறார் முனியாண்டி என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com