திருச்சியில் பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்து சிக்னல் அருகே உயரமான கம்பிகள் அமைத்து, அதில் பச்சைத் துணி கட்டப்பட்டு நிழற்குடை உருவாக்கி தந்திருக்கிறது திருச்சி மாநகர காவல் துறை.
இந்த வருடம் கோடையில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் சமயத்தில் ஒரு சில நாட்கள் கோடை மழை பெய்து குளிர்வித்தாலும் தொடர்ந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்திக் கொண்டிருக்கிறது.
திருச்சியிலும் கடந்த பல நாட்களாக 100 டிகிரியை தாண்டி அனல் அடிக்கிறது. இந்த நிலையில், சாலையில் வாகனங்களில் போய்க்கொண்டே இருந்தால் கூட பரவாயில்லை சிக்னல்களில் காத்து நிற்கும் போது அடிக்கும் வெயில், கை, கால்களை சுட்டு பொசுக்கி விடுகிறது.
இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் புது முயற்சியாக தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் சிக்னலின் ஒரு பகுதியை மேலே பந்தல் அமைக்கும் விதத்தில் உயரமான கம்பிகள் அமைக்கப்பட்டு அதில் பச்சை துணி கட்டப்பட்டு நிழற்குடை உருவாக்கி தந்திருக்கிறது திருச்சி மாநகர காவல் துறை.
இதனால், அந்த இடத்தில் சிக்னலில் காத்திருக்கும் மக்கள் வெயிலில் இருந்து தப்பிப்பதோடு, மேலே அமைக்கப்பட்டு இருக்கும் பச்சை நிற துணி கூரையை பார்த்து 'இதை செய்த புண்ணியவான்கள் நல்லா இருக்கணும்' என்று வாழ்த்தி விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
- திருச்சி ஷானு