ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாந்தாங்கல் கிராமம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் சாந்தி என்ற 60 வயது பெண்மணி. இவர் மேல்நெல்லி அருகில் உள்ள இவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்தார். நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென்று கரும்பு பயிரிட்டு இருந்த நிலம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அந்தப் பகுதியிலிருந்த விவசாயி ஒருவர் சாந்திக்கும், காவல் நிலையத்திற்கும் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் 50 டன் கரும்பு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கரும்புத் தோட்டத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கண்ணெதிரிலேயே கரும்பு தோட்டம் எரிந்து போனதைக் கண்டு விவசாயி சாந்தி கண்ணீர் விட்டுக் கதறியது பார்ப்போரைக் கண் கலங்கச்செய்தது.