கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் ட்விஸ்ட்; என்.ஐ.ஏ.வுக்கு அதிர்ச்சி அளித்த ஸ்பெஷல் கோர்ட்

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக, குற்றவாளிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை மற்றும் மூளை வரைபட சோதனை நடத்தினால் கூட அதனை சாட்சியமாக எடுத்து கொள்ள முடியாது என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை குண்டு வெடிப்பு
கோவை குண்டு வெடிப்பு

இந்தியாவின் க்ரைம் ரெக்கார்டில் தமிழகத்தின் கோயமுத்தூர் சிட்டிக்கு தனி இடம் எப்போதும் உண்டு. 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, கலவர களேபரங்கள், பல்வேறு கொலைகள் ஆகியவை தேசத்தால் மறக்க முடியாதவை. அதற்கடுத்து கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்து வெடிகுண்டு வெடித்தது. இதில், அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ, உடனடியாக கையிலெடுத்து விசாரணையை தொடங்கியது. ஜமேஷாவின் கூட்டாளிகளான 11 பேர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் நான்கு பேரை இந்த வழக்கின் முக்கியமான மூளைகள் என்று என்.ஐ.ஏ. அடையாளப் படுத்துகிறது.

எரியும் கார்
எரியும் கார்

இவர்கள் நான்கு பேரிடமும் உண்மைகளை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு அளித்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆஜராகிய என்.ஐ.ஏ.வின் வழக்கறிஞர் "கைதான நபர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களிடம் பெங்களூருவில் உள்ள தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான நிம்ஹான்ஸ் வாயிலாக உண்மையை கண்டறிய, சோதனை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று வாதாடினார்.

குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞரோ "தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாக தான் இந்த நபர்கள் மீது பொய் வழக்கு போடப்படுள்ளது. உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே இந்த சோதனைக்கு அனுமதிக்க கூடாது" என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் என்.ஐ.ஏ.வின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. அது குறித்த உத்தரவில் "குற்றம் சாட்டப்பட்டவரின் விருப்பத்தின்படி உண்மை கண்டறியும் சோதனை மற்றும் மூளை வரைபட சோதனை நடத்தினாலுமே கூட அதன் முடிவுகளை வழக்கில் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று குறிப்பிடுள்ளது.

- ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com