தங்கும் விடுதிகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு - ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிறதா ஊட்டி?

 தங்கும் விடுதிகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு - ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிறதா ஊட்டி?

தென்னிந்தியாவின் நுரையீரல் என்று பெருமையோடு சுட்டிக்காட்டப்படும் நீலகிரி மலை. வன மாவட்டத்தின் ஊட்டி தான் தமிழகத்தின் உச்ச பெருமையான பிரதேசம்.

சர்வதேச சுற்றுலாதளமான இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

அதிலும் கோடை கால சீசன் மளமளவென உச்சம் பெற துவங்கியுள்ள நிலையில் ஊட்டியில் வந்து குவிகிறது சுற்றுலா கூட்டம். அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டம் முதுமலையின் தெப்பக்காடு யானைகள் முகாமை சேர்ந்த இரு யானைகள் பற்றிய ஆவணப்படமானது ஆஸ்கர் வென்றுவிட்ட நிலையில் அவற்றை பார்க்கவும் பல நாடுகளை சேர்ந்த பயணிகள் வந்திறங்குகின்றனர். ஆக நீலகிரியில், அதிலும் ஊட்டியில் திரும்பிய திக்கெல்லாம் பிஸ்னஸ் பரபரப்புதான். சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் ஊட்டியானது சீசன் பிஸ்னஸில் அடித்து துவம்சம் பண்ணிக் கொண்டுள்ளது. குறிப்பாக இது வரையில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக நீலகிரியில் அதிலும் குறிப்பாக ஊட்டியில் விலைவாசி உயர்வு பீக்தொட்டுள்ளது என்கிறார்கள்.

குறிப்பாக காட்டேஜ்களின் வாடகை வகை தொகை இல்லாமல் வசூலிக்கப்படுகிறதாம். சாதாரண நாட்களில் மூவாயிரம் ரூபாய்க்கு விடப்படும் அறையின் சீசன் வாடகை பத்தாயிரம்,

பனிரெண்டாயிரம் என்று செல்கிறது. அதிலும், பேரத்துக்கு வாய்ப்பே இல்லாமல் ஆன்லைன் புக்கிங் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நேரில் சென்று கேட்கும் நபர்களுக்கு ‘ரூம் இல்லை’எனும் ஒற்றை பதில்தான் வந்து விழுகிறது. ஆன்லைனில் என்ன தொகை போட்டுள்ளதோ அதைப் பார்த்துவிட்டு, ரூம் கிடைத்தால் போதுமென்று அடித்து பிடித்து புக் செய்கின்றனராம் சுற்றுலா பயணிகள். இதனால் காட்டேஜ் மனிதர்களின் காட்டில் செம்ம மழைதானாம்.

காட்டேஜ் மட்டுமில்லை சாதாரண டீயில் துவங்கி எல்லாமே கொள்ளை விலை என்கிறார்கள். பெரிய சைஸ் ஹோட்டல்களில் மட்டுமில்லை தள்ளு வண்டி கடைகளும் இந்த சீசன் பரபரப்பை பயன்படுத்தி தாறுமாறாக விலையை ஏற்றியுள்ளனராம். ரோட்டோர கடைகளில் கூட இரண்டு இட்லி முப்பது ரூபாய், நாற்பது ரூபாய் என்று போகிறதாம். இந்த அதீத விலைவாசியால் மிக மோசமான பாதிப்புக்கு சுற்றுலா பயணிகள் ஆளாகிறார்கள் என்கிறார்கள் விபரமறிந்தோர். கோடை காலத்தில் இரண்டு நாள் குளிர்ச்சிக்காக ஊட்டிக்கு வரும்

நடுத்தர குடும்பத்தினரால் இங்கிருக்கும் விலைவாசியை சமாளிக்க முடியவில்லை. ‘ரெண்டு நாள் ரூமெடுத்து தங்கினாலே நாலு பேர் உள்ள குடும்பத்துக்கு நாற்பதாயிரம் வரைக்கும்

செலவாயிடுது. இதுக்கு ஒரு ஏஸி மெஷினே வாங்கி வீட்ல மாட்டிடுவேன்’ என்று நடுத்தர குடும்ப மனிதர்கள் புலம்புமளவுக்கு நிலவரம் உள்ளது. இந்த பிரச்னை குறித்துப் பேசும் கோத்தகிரியை சேர்ந்த சக்கத்தா சுரேஷ் “எல்லாரும் பொழைக்கணும், எல்லாரும் வாழணும்தான். அதுக்காக இவ்வளவு அதிகமா விலை ஏற்றம் இருக்க கூடாதுங்க. பணக்காரங்க கூட கண்டுக்காம செலவு பண்ணிடுவாங்க. ஆனால், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களுக்கு ஊட்டிங்கிறது எட்டா கனியாகிடும்.

அதனால், மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு பொருளின் விலை மற்றும் வாடகையை முறைப்படுத்தணும். ஆளுங்கட்சியான தி.மு.க. ஆளுங்க இந்த சீசன் பிஸ்னஸில் நுழைந்து, தான் வைப்பதே சட்டம்னு இருப்பதை உடைக்கணும். ஊட்டி பணக்காரங்களுக்கு மட்டுமானது மட்டுமில்லை” என்கிறார்.

நீலகிரி மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது “சீசன் துவங்கும் முன்பே, எல்லாவற்றிலும் நியாயம் பின்பற்றப்படணும்னு அறிவுரை சொல்லியிருந்தோம். இப்பவும், அதிக விலைக்கு விற்கும், அநியாய வாடகை சொல்வோர் பற்றி புகார் வந்தால் உடனடியாக ரெய்டு நடத்துறோம், உணவுப் பொருளின் தரம் பற்றி ஆய்வு செஞ்சு நடவடிக்கை எடுக்கிறோம். அதனால், சுற்றுலா பயணிகள் தங்களின் புகார்களை தாராளமா மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தலாம்” என்கிறார்கள்.

கேட்க நல்லாதான் இருக்குது. ஆனால், ஊர் சுற்ற வந்த இடத்தில் யார் புகார் எழுதிட்டு இருப்பாங்க? நீங்களா பார்த்து கண்ட்ரோல் பண்ணுங்க ஆபீஸர்ஸ்.

- ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com