தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள புல்லூர் பாலாற்றில் தடுப்பணையில் மூழ்கி 10 ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் பாலாற்றில் புல்லூர் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணை பகுதியில் உள்ள கனகநாச்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி கும்பிடுவதற்காக, திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் குடும்பத்தினருடன் வந்துள்ளார்.
அப்போது கோவிலுக்கு அருகாமையில் உள்ள தடுப்பணையில் குடும்பத்துடன் தண்ணீரில் குளித்துக் கொண்டு இருந்தார். இவரது 14 வயது மகள் கலைச்செல்வி (வயது 14). இவர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி உள்ளார். அங்கு இவர் திடீரென தண்ணீரின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கியவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர், ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர்.
இது தொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் தகவல் பெற்று மேல் நடவடிக்கைக்காகக் குப்பம் காவல்துறைக்கு அனுப்பி வைத்தனர். கலைச்செல்வியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.