தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவி நந்தினி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600க்கு 600 மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதல் முறை என்பதால் இத்தகைய பெருமையை சேர்த்த மாணவி நந்தினிக்கு திண்டுக்கல் அரசு உதவிபெறும் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவி நந்தினி கூறும்போது ‘இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகிறேன். இந்த பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரியசாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் எனக்கு ஊக்கமளித்தனர்.
எனது வெற்றிக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர். எனது தந்தை சரவணகுமார் தச்சுத்தொழிலாளியாக உள்ளார். அம்மா பானுபிரியா மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்கிற தம்பி உள்ளார்.
நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும்? என கவலைப்படவில்லை. எனக்கு கல்விதான், படிப்புதான் சொத்து என என் பெற்றோர் சொல்லி சொல்லி வளர்த்தனர்.
அதனையே நானும் இடைவிடாமல் கடைபிடித்தேன். அதனால்தான் இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெற முடிந்துள்ளது. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேற்படிப்பு படிக்க உள்ளேன்’ என கூறினார்.