தூத்துக்குடியில் களம் இறங்கிய போலீஸ் -சாதி அடையாளங்களை அழிக்கும் பணி தீவிரம்

இனிமேல் யாராவது புதிதாக சாதி அடையாளங்களை வரைந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்
சாதிய அடையாளங்களை அழிக்கும் பணியில் போலீசார்
சாதிய அடையாளங்களை அழிக்கும் பணியில் போலீசார்

நெல்லை சம்பவத்தை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அழிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவனையும் அவனது சகோதரியையும் வெட்டி சாய்த்தது இன்னொரு மாணவர் குரூப். சாதி வெறியில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்தது. அதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து பேசி வருகிறார்கள். வெட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் மாணவனை ஆஸ்பத்திரி போய் பார்த்து ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது மாவட்ட காவல்துறை. மாவட்ட போலீஸ் எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக சுவர்களில் வரையப்பட்டுள்ள சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

சாதிய அடையாளங்களை அழிக்கும் பணி
சாதிய அடையாளங்களை அழிக்கும் பணி

அது பற்றி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி பாலாஜி சரவணனிடம் கேட்டோம். "தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அப்போது மாவட்ட முழுவதும் கிராமங்களில் சாதி அடையாளங்களை மின் கம்பங்கள், குடிநீர் தொட்டிகள், கோவில் சுவர்கள், பாலங்கள் மற்றும் வீட்டுசுவர்களில் சாதி அடையாளங்கள் வரையப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுவே பல இடங்களில் சாதி மோதலுக்கு வழி வகுப்பதாகவும் தெரியவந்தது. எனவே, கிராமங்களில் பொது இடங்கள் மற்றும் வீட்டு சுவர்களில் வரையப்பட்டுள்ள ஜாதி அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கிராம மக்களின் உதவியுடன் அதை செய்தோம். பல கிராமங்களில் கிராம மக்கள் தானாக முன்வந்து சாதி அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் இதுவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 561 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது புதிதாக சாதி அடையாளங்களை வரைந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து இருக்கிறோம்" என்றார்.

எஸ்.அண்ணாதுரை

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com