தூத்துக்குடி: தூய்மைப் பணியாளர்கள் வினோத போராட்டம் - என்ன காரணம்?

4 மண்டலங்களில் 89 பணியாளர்கள் இன்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள்
போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள்

தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வினோத போராட்டம் நடத்தினர்.

ஏழு அம்ச கோரிக்கைகளின் விவரங்களை துப்புரவு பணியாளர்கள் சிலரிடம் கேட்டோம், அவர்கள் நம்மிடம், "தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 89 பணியாளர்கள் இன்று கோரிக்கை அட்டை அணிந்து நாங்கள் பணியில் ஈடுபட்டோம்.

அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்,

அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்திட வேண்டும், எல்லை விரிவாக்க பணியாளர்கள் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், செயல் திறனற்ற பணியாளர்கள் ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கிட வேண்டும். அலுவலக நேரத்தில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திட வேண்டும்,

ஆய்வு கூட்டங்கலில் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிற துறை பணியாளர்களை நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்துடன், அரசாணை எண் 152 அரசாணை எண் 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும். நகராட்சி,மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்" இதுதான் எங்களது ஏழு அம்சக் கோரிக்கை என்றனர்.

இதை மாநகராட்சி செய்யத்தவறினால், அடுத்து தமிழகமே அதிரும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்றனர்.

- எஸ்.அண்ணாதுரை

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com