ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், மன உளைச்சலில் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவருடைய மகள் கீர்த்திகா (வயது 17). இவர் படப்பை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். நேற்று முன்தினம் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி குறைந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிகிறது.
ஆனால் எதிர்ப்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் கீர்த்திகா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பெற்றோர் தூங்கி கொண்டிருந்த போது கீர்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் காலையில் வழக்கம் போல் எழுந்த பெற்றோர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மகளின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தூக்கில் தொங்கிய கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டு வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060