காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கைப்பந்து, கூடைப் பந்து, சிறகுப் பந்து, இறகுப் பந்து, நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் உள்ளது.
மேலும் இந்த விளையாட்டு அரங்கத்தில் ஓட்டப்பந்தய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு 400 மீட்டர் ஓடு பாதை உள்ளது. இந்நிலையில் 400 மீட்டர் ஓடு பாதையில் கற்கள் நிரப்பி, செங்கல் தூள் மற்றும் செம்மண் கலந்து ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால் ஓட்டப்பந்தய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள சிரமமாக உள்ளது என்று கூறுகின்றனர்.
இந்த ஓடு பாதையில் பயிற்சி எடுக்கும் வீரர்களுக்கு மூட்டு வலி தொடர்ந்து ஏற்படுவதாகவும், நிறைய இளம் வீரர்கள் ஓட்டப்பந்தய பயிற்சியின் போது கீழே விழுந்து அடிபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது.
இந்த நானூறு மீட்டர் ஓடு பாதையை "சிந்தடிக் ஓடுதளமாக" மாற்றி தர வேண்டும் என விளையாட்டு வீரர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிந்தடிக் ஓடுதளமாக மாற்றினால் மட்டுமே காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் மாநில, தேசிய அளவில் பங்கு பெற முடியும் என விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.