கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருபவர் தபித்தா. சைக்கிளிங் வீராங்கனை.
இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் ஜனவரி 2023ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் 7 முதல் 10ம் தேதி வரையில் நடந்த 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் பங்கேற்று தபித்தா தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இதையடுத்து தபித்தா பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு ஏதுவாக போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால் பல்வேறு சாதனைகளை படைத்து மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என தபித்தா தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையினை பரிசீலித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிதிவண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீராங்கனை தபித்தாவுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பீட்டிலான மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.