நெல்லை மாவட்டம் திசையன் விளை அடுத்த அப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா (19) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த முத்தையா அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதற்கிடையில் முத்தையா காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியானது.அதாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்தையா இட்ட மொழியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த பெண் முத்தையாவைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். முத்தையா அந்த பெண்ணை அவரது வீட்டில் கொண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அன்று இரவு தான் முத்தையா கொலை செய்யப்பட்டார். எனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முத்தையாவை அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஆணவ படுகொலை செய்து விட்டதாக முத்தையாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் தலை தூக்காமலிருந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் ஆணவக் கொலை நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை நெல்லை மாவட்ட காவல்துறை மிகக் கூர்மையாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் திசையன் விளை காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு வழக்கின் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். மேலும் முத்தையா காதலித்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் விரிவாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார்.
இவ்வழக்கில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரைக் கைது செய்தனர். இருப்பினும் முத்தையாவின் இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டனர். அங்கு வந்த போலீசார் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தான் முத்தையா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முத்தையாவின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் மற்றும் காவல் ஆய்வாளர் முத்தையாவின் இல்லத்திற்கு வந்து 3 லட்சம் வரை பணம் தருகிறோம். பேசாமல் உடலை வாங்கிக் கொண்டு கடைசி காரியத்தைச் செய்யுங்கள் என மிரட்டியதாக முத்தையாவின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் விஸ்வரூபம் எடுக்கவே கம்யூனிஸ்ட் கட்சி உள்பட இடதுசாரி அமைப்புகளும் முத்தையா விவகாரத்தைக் கையில் எடுக்கத் தொடங்கினர்.
இது குறித்து பேட்டி அளித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், காவல்துறையினர் திட்டமிட்டு இந்த வழக்கைத் திரும்புகின்றனர். இது ஒரு ஆணவப் படுகொலையை என்றும் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் முத்தையா விவகாரத்தில் சாதிய படுகொலை நடைபெறவில்லை என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரப்பரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கன்னியப்பன் தனது மகன் முத்தையா, வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், 23.07.2023-ம் தேதி அன்று இரவு தனது மகன் ஓடக்கரை பாலம் அருகில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும், தனது மகன் காதலித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாதி பாகுபாடால் கொலை செய்துள்ளனர் எனக் கூறி மனு அளித்தனர். இது குறித்து தனிப்படை போலீசாரின் விசாரணையில், இறந்து போன முத்தையா என்பவர் அப்பு விளையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். அதனை அவரது தங்கை சுரேஷிடம் சொல்லி அழுதுள்ளார். ஏற்கனவே சுரேஷின் தங்கை இறந்து போன முத்தையாவின் உறவினரால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருகிறது.
இதனால், ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் முத்தையாவை எச்சரித்துள்ளார். அதன் பின்பும் 22.07.2023-ம் தேதி மதியம் சுரேஷின் தங்கையை முத்தையா கிண்டல் செய்து தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். அதனை அவரின் தங்கை சுரேஷிடம் கூறியுள்ளார். இதனால் முத்தையா உயிருடன் இருக்கும்வரை தங்கையிடம் பிரச்சனை செய்து கொண்டிருப்பான் என்று எண்ணி தனது உறவினர்களான மதியழகனிடமும், தெரிவித்து 3 பேரும் சேர்ந்து 23.07.2023-ம் தேதி இரவு முத்தையாவிடம், சுரேஷ் தனது தங்கையைக் கிண்டல் செய்தது குறித்துக் கேட்டுள்ளார். அப்போது சுரேஷ் அவருடைய உறவினர்கள் தாக்கியுள்ளனர். முத்தையாவுடன் நின்றிருந்த அவரது நண்பர் சிறு காயத்துடன் ஒடி விட்டார். முத்தையாவிற்குக் குத்து காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் இது ஜாதிய படுகொலை இல்லை எனத் தெரிய வருகிறது" என அறிக்கையில் கூறியுள்ளனர்.