திண்டுக்கல்: ஸ்கூட்டருக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு - லாவகமாக மீட்டது எப்படி?

திண்டுக்கல் அருகே ஸ்கூட்டருக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னர், மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாவகமாக மீட்கப்பட்டது.
பாம்பு மீட்கப்படுகிறது
பாம்பு மீட்கப்படுகிறது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் நாகராணி (45). இவர், அதேப் பகுதியில் தையல் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். நேற்று இவர், தனது ஸ்கூட்டியை பயிற்சி நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

அந்த ஸ்கூட்டிக்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் நாகராணியிடம் கூறினர். இதையடுத்து நாகராணி வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

இதுதொடர்பாக தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் தேடினர். ஆனால் பாம்பு சிக்கவில்லை. இதையடுத்து பைக் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு ஸ்கூட்டரில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக கழற்றப்பட்டன.

அப்போது ஸ்கூட்டருக்குள் பதுங்கி இருந்த 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு தலையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தது. இதை பார்த்து அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினர்.

இதன் பின்னர் அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். இதன் பிறகே நாகராணி நிம்மதியாக வீடு திரும்பினார். இந்த சம்பவத்தால் வேடசந்தூர் கடைவீதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com