கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக ரூ.1000 பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 1.63 கோடி குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வுகள் மேற்கொண்டு தகுதி வாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அந்த வகையில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளுக்கு உரிமை தொகை அனுப்பப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது.
அடுத்த தவணை பணம் செலுத்துவதற்குள் அவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 57 லட்சம் விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ஏற்க முடியாத விண்ணப்பங்களாக கருதி அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன் ? அவர்களை விட வசதி படைத்தவர்களுக்கு உரிமை தொகை கிடைத்து இருப்பதாகவும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்க பட்டதற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் அடைந்துள்ளார்கள்.
அதன்படி அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.