சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு?- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தன் மீது உள்ள பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சிவசங்கர் பாபா தரப்பில் வாதிடப்பட்டது.
சிவகங்கர் பாபா
சிவகங்கர் பாபா

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனரான சிவசங்கர்பாபா, கடந்த 2015ஆம் ஆண்டில் அங்கு படித்த மாணவி, தன் பிறந்தநாளன்று ஆசிர்வாதம் வாங்க சென்றபோதும், ஆஞ்சநேயர் கோவிலுக்கு மீண்டும் வரவழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவற்றது எனவும், அரசியல்வாதிகள் மற்றும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள், ஊடக விவாதம் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக, முறையான விசாரணை இன்றி, தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புகாரளித்த பிறகு நடைபெற்ற பள்ளி நடன நிகழ்ச்சியில், புகார் கொடுத்த அந்த பெண் கலந்து கொண்டதை குறிப்பிட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தன் மீது உள்ள பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து முன்னாள் மாணவி அளித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது? என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com