சந்திரயான்-3 லேண்டர் இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் வைப்பதா?- கொந்தளித்த டாக்டர் சங்கம்

இந்திய பிரதமர் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபரை சந்தித்தது வரவேற்கத்தக்கது
பிரதமர் மோடி, டாக்டர் ரவீந்திரநாத்
பிரதமர் மோடி, டாக்டர் ரவீந்திரநாத்

சந்திரயான்-3 லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்ததற்கு அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மூன்றாம் உலகப்போரும், உலக சமாதானமும் என்ற தலைப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "இஸ்ரோ விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், கடுமையான முயற்சி செய்து, சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி நிலவில் லேண்டர் செய்துள்ளனர். இது மிகப்பெரிய வரலாற்று சாதனை. உலகத்தில் இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய பெருமை. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நிலவில் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட்டுள்ளார். இது வருத்தத்தை அளித்துள்ளது.இந்தியா மதசார்பற்ற நாடு, இந்திய நாட்டு மக்கள் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் அவ்வாறு உள்ள போது, இந்திய நாட்டின் மிகப்பெரிய அறிவியல் சாதனையை தனிப்பட்ட மதத்திற்கு உரியதாக மாற்றக்கூடிய வகையில் இந்துத்துவா அரசியலை செய்வது என்பது ஏற்புடையதல்ல.

அதேபோல், விண்கலம் சென்றடைந்தபோது வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலும் சர்ச்சைக்குரியது என்று தெரிவித்தார். மேலும் இந்திய பிரதமர் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபரை சந்தித்தது வரவேற்கத்தக்கது. இந்தியா, சீனா உறவு மேம்பட உதவிகரமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து ஆசியா, பசிபிக் பகுதியில் ராணுவத்தை குவித்து வருகிறது. போரை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது. இதை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டு ராணுவ பகுதியில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்.

ஆசியா, பசிபிக் பகுதியை சமாதான மண்டலமாக அறிவிக்க வேண்டும்.அதற்காக அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் மிகப்பெரிய மாநாட்டை டெல்லியில் நடத்த உள்ளோம். வாக்கு வங்கி அரசியலை நோக்கமாகக்கொண்டு இந்திய நாட்டு மக்களை மத ரீதியாக, இனரீதியாக, மொழி ரீதியாக பிரிக்கக் கூடிய சூழ்ச்சியை, பிஜேபியும் சங்பரிவார் அமைப்புகளும் கைவிட வேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com