சிவகாசி: ஜிம் பயிற்சியாளர்களை மிரட்டி பணம்- போலி அதிகாரிகள் சிக்கியது எப்படி?

சிவகாசி: ஜிம் பயிற்சியாளர்களை மிரட்டி பணம்- போலி அதிகாரிகள் சிக்கியது எப்படி?

’ஜிம்களில் பயிற்சியாளர் சான்றிதழ் எங்கே?’ எனப் பணம் கேட்டு மிரட்டிய போலி அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை, தினமணி நகரைச் சேர்ந்த மார்க்ரெட் ஜெனிபர் (30), சாமி ராஜ் (33), ரங்கராஜ் (26) ஆகிய 3 பேரும் சிவகாசியில் முகாமிட்டனர். பிறகு 7 உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்ற அவர்கள், ‘’நாங்கள் இன்டர்நேஷனல் நார்காட்டிக்ஸ் கட்டுப்பாடு துறைமுகத்து அதிகாரிகள்’ எனக் கூறி, போலி அடையாள அட்டையைக் காட்டியுள்ளனர்.

பிறகு ஜிம் ஆவணங்களை ஆய்வு செய்வது போல் நடித்துள்ளனர். பின்னர், ’’நீங்கள் பயிற்சி அளிப்பதற்கு உரிய படிப்புகளை முடித்திருக்கிறீர்களா? அதற்கான சான்றிதழ்கள் எங்கே?’’எனக் கேட்டுள்ளனர். சான்றிதழ் இல்லை என்பவர்களிடம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மிரட்டி வாங்கியுள்ளனர்.

அடுத்து சிவகாசி, பழைய விருதுநகர் ரோட்டில் உள்ள சிவமுருகன் என்பவரது ஜிம்மிற்கு சென்றுள்ளனர். அங்கும் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த சிவமுருகன் மற்ற ஜிம் உரிமையாளர்களிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது அனைவரும் லஞ்சம் கொடுத்ததாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்களிடம் ஏமாந்த அனைவரும் சிவமுருகனின் ஜிம்மிற்கு சென்று அந்த 3 பேரிடமும் ’உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள். உங்கள் உயர் அதிகாரி யார்?’ என்று கேட்டுள்ளனர்.

இன்டர்நேசனல் நாட்கார்ட்டிக்ஸ் கட்டுப்பாடு போர்டு அதிகாரிகள் என்று கூறிய 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர். இது பற்றி சிவமுருகன், சிவகாசி கிழக்கு காவல்துறைக்குத் தகவல் கூறினார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் 3 பேரையும் விசாரித்தபோது, அவர்கள் போலி அதிகாரிகள் எனத் தெரிந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com