வெம்பக்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தற்கான சாட்சிகளாக 3 ஆயிரம் பழம் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் வைப்பாறு ஆற்றங்கரையோரம் உச்சிக்காடு என்ற இடத்தில் 25 பரப்பளவில் தொல்லியியல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கடந்த ஆண்டு நடந்தது. இதில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூதாதையர்கள் வாழ்நத்தற்கான அறிவியல் பூர்வமான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன.
குறிப்பாக நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை வெம்பக்கோட்டை பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தற்கான பல்வேறு சான்றுகள் இந்த ஆராய்ச்சி மூலம் வெளியே வந்தன. குறிப்பாக சுடுமண்னால் ஆன விளையாட்டு பொருள்கள், சுடுமண் முத்திரைகள், பகடைக்காய்கள், கண்ணாடி வளையல்கள், உள்பட 3,254 வரலாற்று சான்றுகள் கிடைத்தன. இதையடுத்து இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கடந்த ஏப்.,6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், வெம்பக்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்தற்கான அடையாளங்கள், வரலாற்று சான்றுகளை பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றை வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் பழங்கால பொருள்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பொது மக்கள், பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு வசதியாக வெம்பக்கோட்டை முதல் விஜயகரிசல்குளம் வரை இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
-விருதுநகர் கார்த்தி