சிவகங்கை: கோயில் விழாவில் இரு தரப்பினர் மோதல் - போலீஸ் குவிப்பு - என்ன காரணம்?

மோதலில் 4 சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார்
மருத்துவனையில் போலீசார் விசாரணை
மருத்துவனையில் போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒக்கூர் புதூர் அருகே உள்ள பிரவலூர் பகுதியில் உள்ள அருள்மிகு சுந்தரமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதலால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் புதூர் அருகே உள்ள பிரவலூரில் சுந்தரமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சமமாக முளைப்பாரியை வைத்து ஊர்வலமாக செல்லக்கூடாது என்றும், கோயில் திருவிழாவில் ஒரு சமுதாயத்தினர் கலந்து கொள்ளக்கூடாது என்றும், நவீன தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், இந்த பகுதியில் இரு சமுதாய மக்களிடம் மோதல் வெடித்துள்ளது. இதில், சிலர் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரண்டனர். அப்போது, அவர்களது வாகனம் மற்றும் அவர்களுக்கு துணையாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களும் எதிர்தரப்பினரால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் உடன் வந்த நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் விழாவில் மோதல் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com