நாமக்கல் மாவட்டம் மோகனூர் பக்கமுள்ள மணப்பள்ளியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் அவரது அக்கா ஷியமளாவால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் அண்மையில் நடந்துள்ளது.
மோகனூர் அருகேயுள்ள கீழ் பாலப்பட்டியில் கணவனுடன் வாழப் பிடிக்காமல் வந்து விட்ட தன் மூத்த மகள் ஷியமளாவுடன் வசித்து வந்த பாண்டியனின் அம்மா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
தாயார் மறைந்ததால் அவர் வாழ்ந்து வந்த வீட்டிற்கு தினமும் விளக்கு போட்டு சடங்கு செய்யுமாறு ஜோதிடர் கூறியிருக்கிறார். இதற்காக கீழ் பாலப்பட்டியில் தன் தாய் வீட்டில் தங்கியிருந்து பாண்டியன் தனது அக்கா ஷியமளாவுடன் விளக்கு போட்டு வந்திருக்கிறார்.
இருவருமே குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இருவரும் சேர்ந்து தினமும் மதுவை வாங்கி வந்து கடந்த ஐந்து நாட்களாக அந்த வீட்டில் குடித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் நேற்று தாய்க்கு விளக்கு போட்டு வணங்கிவிட்டு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் அம்மா வசித்த வீடு தனக்கென்று பாண்டியன் சொல்ல, அப்படினா நான் எங்க போய் தங்கறது, இத்தினிநாள் அம்மா கூட இருந்துட்டேன். அதனால எனக்கு வீட்டை விட்டுக் கொடுத்திடு என ஷியமளா தனது தம்பி பாண்டியனிடம் சொல்ல இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அக்காளிடம் வாக்குவாதம் செய்து களைப்பில் போதையில் பாண்டியன் மட்டையாகிவிட, இரும்பு ஊதாங்குழலை எடுத்து ஷியாமளா அவரது முகம், வாய், மண்டையில் அடித்து இருக்கிறார். அடிதாங்காமல் பாண்டியன் சத்தம் எழுப்பியபோதும் அதை போதையில் நடக்கும் ரகளை எனக் கருதிய அக்கம் பக்கத்தினர் யாரும் உதவிக்கு வரவில்லை.
சத்தம் அதிகமாகக் கேட்கவே சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு போய்க் பார்க்கும்போது பாண்டியன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பாண்டியனை எடுத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
தகவல் அறிந்து வந்த மோகனூர் போலீஸார் பாண்டியனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு ஷியமளாவை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். சொந்த அக்காவே போதையில் தம்பியை சொத்துக்காக அடித்து கொலை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.