பரமக்குடிக்கு பறந்து வந்த சிங்கப்பூர் முதலாளி - நெகிழ்ந்துபோன தொழிலாளி - என்ன காரணம்?

தமிழர்களின் அன்பு, கலாச்சாரம், உபசரிப்பு பாராட்டும் வகையில் உள்ளது
சிங்கப்பூர் முதலாளி ஸ்டீபன் லீ குவான்
சிங்கப்பூர் முதலாளி ஸ்டீபன் லீ குவான்

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க பரமக்குடிக்கு வருகை தந்த சிங்கப்பூர் முதலாளிக்கு தமிழரின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செய்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் - செல்லமீனாள் தம்பதியிரின் மகன் கலைவாணன். இவர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், கலைவாணணுக்கும், பரமக்குடி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தவல்லி என்ற பெண்ணுக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இவர்களது திருமணம் பார்த்திபனூரில் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில், கலைவாணன் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தனது முதலாளி தனது திருமணத்திற்கு வருகை தந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டு சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டீபன் லீ குவான்க்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து, இன்று பார்த்திபனூரில் நடைபெற்ற கலைவாணன் திருமணத்திற்கு சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டீபன் லீ குவான் வருகை தந்தார்.

அவரை வரவேற்கும் விதமாக ட்ரம்ஸ் செட் வைத்தும், பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், திருமாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். "தமிழர்களின் கலாச்சாரம், உபசரிப்பு இதுவரை நேரில் பார்த்ததில்லை, வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது" என்றும் அவர் மனதாரா பாராட்டினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com