நாகையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதை எஸ்.பி கண்டித்ததால் எஸ்.ஐ ஒருவர் தனக்குத்தானே அபராதம் விதித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது, செருப்பால் அடித்துக்கொள்வது போன்ற பல சுவாரஸ்ய சம்பவங்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போலீஸ் அதிகாரி ஒருவர் உயர் அதிகாரி ஒருவரின் நடவடிக்கைக்கு ஆளாகாமல் இருக்க தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட சம்பவம் வித்தியாச சம்பவம் நாகையில் அரங்கேறியிருக்கிறது.
நாகை மாவட்ட போலீஸ் எஸ்.பி ஹர்ஷ் சிங், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று அறிவுறுத்தியும், அது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகிறார்.
இதனைத்தொடர்ந்து, நாகை போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்துள்ளாரா? என்று தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர். அத்துடன் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் ஹெல்மெட் தொடர்பாக இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படவேண்டும் என டார்க்கெட் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று தினமும் வாக்கி டாக்கியில் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்களுக்கும் எஸ்.பி ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்துள்ளார். இவரது தகவலை நாகை வெளிப்பாளையம் காவல்நிலைய எஸ்.ஐ கனகராஜ் என்பவர் ரிசீவ் செய்து கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்வதாக எஸ்.பியிடம் உறுதியளித்துள்ளார்.
ஆனால், அடுத்த அரைமணி நேரத்தில் எஸ். பி ரோந்து சென்றபோது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற எஸ்.ஐ கனகராஜ் ஹெல்மெட் அணியாமல் சென்றதை பார்த்து கடுப்பானவர் அவரை தொடர்பு கொண்டு ”இப்போதுதானே ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்று கூறினேன்.
நீங்களும் தகவலை ‘ரிசீவ்’ செய்ததாக கூறினீர். இப்போது ஹெல்மெட் அணியாமல் செல்கிறீர்களே’ என்றபடி டோஸ் விட எஸ்.பியின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனக்குத்தானே ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 1,000 ரூபாய் அபராதம் விதித்து அந்த பணத்தை செலுத்தி அதற்கான ரசீதை எஸ்.பிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
எஸ்.பியும் இனி இதுபோல் நடக்கக்கூடாது’ என்று எச்சரிக்கையும் செய்தார். எஸ்.ஐ ஒருவர் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
- ஆர்.விவேக் ஆனந்தன்