சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலை கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு நேற்று ஒரே நாளில் 25க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் எதிரொலியாக சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தவகையில் சாலை கிராமம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான் பிரிட்டோ என்பவர் மது விற்பனையில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி செல்வராஜ் உத்தரவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காவல் துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.