கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து சமூகவலைதளங்களில் பலரும் பேசிவரும் நிலையில், ஸ்ரீமதியின் தாயார் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை விடுதியின் 2-வது மாடியிலிருந்து இருந்து விழுந்து மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால், உடலில் காயங்கள் இருந்ததாகவும் பெற்றோர்கள் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி பலரும் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.
மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீமதியின் தாய் செல்வி, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் மகளின் மரணம் தொடர்பாக தன் மீதும், தனது குடும்பத்தார் மீதும் தனியார் யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள அவதூறு வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வி, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.