கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி கவிதா. தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகளான நிலையில் 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 ஆண்டுகளாக கவிதா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விருத்தாசலம் பாலக்கரையில் பொரி கடை நடத்தி வரும் ஆறுமுகம் என்பவரிடம் கவிதா வேலை கேட்டுள்ளார்.
ஏற்கனவே ஆறுமுகம் தனியாக வசித்து வந்த நிலையில் கவிதா உதவிக்கேட்டதை அடுத்து அவருக்கு வேலை கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
நாட்கள் செல்லச்செல்ல கவிதாவும், ஆறுமுகமும் கணவன் மனைவியாக வசிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஆறுமுகத்துக்கு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்த வைத்தி என்பவர் அறிமுகமானார்.
பொரி வியாபாரத்தில் போதிய வருமானம் வராததால் ஆறுமுகம், வைத்தி 2 பேரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு கிடைத்த பணத்தை வைத்து பங்குப்போட்டு வந்துள்ளனர்.
இதன் காரணமாக வைத்தி அடிக்கடி ஆறுமுகம் வீட்டுக்கு வந்துள்ளார். இதன் விளைவாக கவிதாவும், வைத்தியும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதை அறிந்ததும் வைத்தியிடம் ஆறுமுகம் தகராறு செய்துள்ளார்.
இது பிடிக்காததால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆறுமுகத்திடம் இருந்து பிரிந்த கவிதா, உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராமத்தில் உள்ள வைத்தி வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தில் உள்ள வைத்தி வீட்டிற்கு வந்து கவிதாவை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதில் அவர்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கவிதா மற்றும் வைத்தி இருவரும் சேர்ந்து ஆறுமுகத்தை அடித்து தள்ளி உள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த பெட்ரோலை ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
ஆறுமுகத்தின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் ஆறுமுகம் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறியுள்ளனர்.
தொடர்ந்து படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு கவிதாவும், வைத்தியும் மருத்துவமனைக்கு கொன்று சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து கவிதா, வைத்தியிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியபோது ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
உடனே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து வைத்தி மற்றும் கவிதாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.