என்.எல்.சி: 28 வட மாநில நபர்களுக்கு வேலை - வெளியானது ரகசியம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்.எல்.சி நிறுவனம்
என்.எல்.சி நிறுவனம்

என்.எல்.சி இந்தியா நெய்வேலியில் செயல்படும் நிறுவனத்திற்கு, நிலம் கொடுத்ததாக கூறி, 28 வட மாநிலத்தவற்கு வேலை வழங்கியது அம்பலத்திற்கு வந்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்காமல் என்.எல்.சி நிர்வாகம் பல ஆண்டுகளாக காலம் கடத்தி வந்தது.

இந்நிலையில் என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் சார்பாக குப்புசாமி என்பவர் என்.எல்.சி-யில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்டுள்ளார்.

அதற்கு, கடந்த 08-01-1990-ல் இருந்து 12-03-2012 வரை 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. அதில் 862 பேரில், 834 பேர் மட்டுமே நிலம் கொடுத்தவர்களில் தமிழர்கள் என்றும், மீதமுள்ள 28 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்புசாமி என்பவர் என்.எல்.சி-க்கு நிலத்தை கொடுத்த தனக்கு வேலை வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால், வேலை கிடைக்காத காரணத்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டுள்ள நிலையில், இந்த தகவலை பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த தகவல் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளது.

- கோவிந்தராஜ்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com