பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் பேசி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்த காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக திட்ட இணைப்பு அதிகாரி ’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இணைப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் மகேஷ்குமார். இவர் அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் இழிவாக பேசுவது, அவர்களின் நடத்தை குறித்து தவறாக விமரிப்பது, கையை தொட்டு பேசுவது, தலையை, காலை அமுக்கி விடச்சொல்வது என்று பாலியல் ரீதியாகவும் டார்ச்சர் செய்து வருவதாகக் கூறப்பட்டது. இது குறித்து நாம் ஏற்கனவே குமுதம் டிஜிட்டலில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் ஒரு பெண் ஊழியரிடம் "என் வீட்டுக்கு வந்து வீட்டு வேலையையும் செய்யணும்” என்றபடி நெருக்கடி கொடுக்க, அந்தப் பெண் அதிர்ச்சியில் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவிற்கு போய்விட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தால் அவர்களும் மகேஷ்குமாருக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ’சரியாக வேலை செய்யாதவர்களை கண்டித்தால் இப்படி என் மீது பொய்யான புகார்களை கூறுகின்றனர்’ என்று அதிகாரிகளிடம் பொய்யான விளக்கத்தை மகேஷ்குமார் கூறிவந்தார்.
இந்நிலையில் கொதித்துப்போன ஒட்டுமொத்த பெண் ஊழியர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை இட்டதோடு வட்டார வளர்ச்சி அதிகாரி சச்சிதானந்தத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடமும் புகாரை கொடுத்து பொங்கியிருக்கின்றனர். போதாக்குறைக்கு காரைக்கால் மகளிர் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
மகேஷ்குமாருக்கு இரு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருந்து அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்துவருகின்றனர் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒட்டுமொத்த ஊழியர்களும் அலுவலக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சித்துறை திட்ட அதிகாரி ராஜேந்திரன், மகேஷ்குமாரை ’சஸ்பெண்ட்’ செய்து உத்திரவிட்டார். இதனையடுத்து பெண் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து இருக்கின்றனர்.
இப்புகார்கள் குறித்து திட்ட இணைப்பு அதிகாரி மகேஷ்குமாரோ, “அலுவலகத்தில் வேலையே செய்வதில்லை. கேட்டால் இப்படி என் மீது பொய்யாய் பாலியல் ரீதியான புகார்களை கூறுகின்றனர். அதிகாரியின் என் மீதான நடவடிக்கை குறித்து நான் மேல் முறையீடு செய்யவுள்ளேன்” என்கிறார்.
- ஆர்.விவேக் ஆனந்தன்