திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி 10 பேரை விசாரணை என்ற பெயரில் ஆந்திரா போலீசார் அழைத்துச் சென்று உடலில் மிளகாய் பொடி தூவியும், தாக்கியும் கொடூரமாக பாலியல் தொந்தரவு செய்து சித்ரவதை செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில் குறவன் சமுதாயத்தை சேர்ந்த ரேனுகா (35), தமிழரசன் (20), அருணா (27), கண்ணம்மாள் (65), ஸ்ரீதர் (7), சத்யா (40), ரமேஷ் (55), ராகுல் (5), ஐயப்பன் (45), பூமதி (24) உள்பட 10 பேரை கடந்த 11-ம் தேதி இரவில் குற்ற வழக்கு சம்பந்தமான விசாரணைக்காக ஆந்திரா போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த திருட்டு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசார் அழைத்து சென்றதாகவும், ஆனால் இந்த திருட்டில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ் பழங்குடியின குறவன் சங்கம் சார்பிலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் புகாரின் பேரில் மீட்டனர்.
ஆனால் பூமதி (24), ஐயப்பன் (45) ஆகிய இருவரும் இன்னும் மீட்கப்படாமல் ஆந்திரா போலீஸ் நிலையத்திலேயே உள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அவர்கள் உடலில் மிளகாய் பொடியை தூவி, கொடூரமாக தாக்கியும், சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதில் இரண்டு பெண்களான ரேணுகா, அருணா ஆகியோரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே குற்ற செயலில் ஈடுபடாத எங்கள் உறவினர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்ற ஆந்திர மாநில போலீசார் தாக்கியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
பொய்கை .கோ.கிருஷ்ணா