மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கழிவுநீர் கலப்பதாக நமது Kumudam.com வெளியான செய்தி எதிரொலியாக துலாக் கட்டத்தில் கலந்த கழிவுநீரை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றியுள்ளனர்.
மயிலாடுதுறையில் காவிரி நதியின் நடுவில் உள்ள இடம் துலாக்கட்டம் எனப்படுகிறது. இதனை ரிஷப தீர்த்தம் என்றும் சொல்வார்கள். ஐப்பசி மாதத்தில் இங்கே தீர்த்தவாரி நடைபெறும் போது ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள்.
இந்த இடம் முழுக்குத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. புண்ணிய நதிகள் தன்னுள் நீராடுபவர்களால் பாவமடைந்துவிட இந்த காவிரியில் நீராடி தங்களுக்குள் உள்ள பாவங்களை போக்கிக்கொண்டதாகவும் தல வரலாறுகள் சொல்கிறது.
அப்படிப்பட்ட புண்ணிய தீர்த்தமான காவிரி துலாக்கட்டம் பகுதி தற்போது சாக்கடைகளால் சீர்கெட்டு கிடக்கிறது. மயிலாடுதுறை பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள காவிரியில் பாதாள சாக்கடை நீர் கலந்து நோய் பரப்பும் பகுதியாக மாறியிருப்பதையும், பல ஆயிரம் பக்தர்கள் புனித நீராடும் காவிரியைக்காண மிகவும் வேதனையாக இருப்பதால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என KUMUDAM.COM-ல் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நமது செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து துலாக்கட்டத்தில் கலந்த கழிவுநீரை அகற்றியுள்ளனர். மேலும் கழிவுநீர் கலக்காமல் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அ.அப்பர்சுந்தரம் என்பவர் கூறுகையில், ”மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று KUMUDAM.COM வாயிலாக தெரிவித்திருந்தோம்.உடனடியாக மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர் மகாதேவன் நேரடியாக வருகை தந்து இன்று கழிவுநீரை அகற்றும் பணியை மேற்கொண்டதை மனதார பாராட்டுகிறோம். எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் தடுக்கும் சூழலை நகராட்சி நிர்வாகம் தொடர் கண்காணிப்பில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பது நம் அனைவரிடமும் கோரிக்கையாகும்.மேலும் குமுதம்.காம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி!” என தெரிவித்துள்ளார்.