’தமிழகத்தில் நிர்வாகம் மிக மோசமாக சீர்குலைந்து கிடக்கிறது. இதனால் ஆளும் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதை திசை திருப்பத்தான் சனாதன ஒழிப்பு! எனும் சர்ச்சை பேச்சை உதயநிதி செய்துள்ளார்’ என்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
விஷயம் இதுதான்….
திமுகவின் இளைஞரணி மாநில செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி சமீபத்திய நிகழ்வொன்றில் பேசும்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும்! என்று பேசியிருந்தார். இதற்கு தேசமெங்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ‘சனாதனத்தின் உண்மை அர்த்தம் புரியாமல், இந்து மதத்துக்கு எதிராக மிக மூர்க்கத்தனமாக உதயநிதி பேசியுள்ளார். அவர் இதற்கு மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்’ என்று கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த பாஜக ஆதரவு இயக்கமான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என எல்லாமே மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் மக்களை திசை திருப்பிடதான் ‘சனாதன ஒழிப்பு’ என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஆகியோரை ஜனாதிபதியாக தேர்வு செய்த போது எதிர்த்து வாக்களித்த திமுக எம்.பி.க்கள் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள்.
நீதிபதிகள் நியமனத்தில் கூட ‘நாங்கள் போட்ட பிச்சை’ என்று பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தி பேசினார் ஆர்.எஸ்.பாரதி. பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்த கட்சிதான் திமுக. இவர்களெல்லாம் சனாதனத்தை பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதன் கண்கூடான உதாரணம்தான் பல்லடம் நால்வர் படுகொலை. துள்ளத் துடிக்க கொல்லப்பட்டுள்ளனர் ஒரே குடும்பத்தினர்.
ஒரே நாளில் ஒன்பது கொலைகள் நடந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலைகள் நடக்காத நாளே கிடையாது. இதுதான் நிர்வாக லட்சணம்.
சூழல் இப்படி இருக்கையில் தங்கள் மீதான விமர்சனங்களை திசை திருப்பும் வகையில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தவிர வேறு என்ன தகுதி அவருக்கு உள்ளது? இவருக்கு அடுத்து இன்பநிதி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்! என்று சொலும் அளவுக்கு திமுகவில் அடிமைத்தனம் மலிந்து கிடக்கிறது. இதற்கெல்லாம் எதிர்வரும் தேர்தல்கள் மூலம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
தன்னை சிறந்த முதல்வர் என்று விளம்பரம் செய்து கொள்ளும் ஸ்டாலின், தேர்தலை கண்டு நடுங்குவது ஏன்? மக்கள் நல திட்ட சாதனைகள் எதையும் செய்யாமல், தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மட்டும் மாற்றியுள்ளார்” என்று விளாசிவிட்டு கிளம்பினார்.
- ஷக்தி