கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்திய நிறுவனத்தில் ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல், நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தின் நுழைவாயில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுரங்கத்தின் அருகாமையில் உள்ள யார்ட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் அச்சு திடிரென்று உடைந்ததனால் யாரும் எதிர்பாராத வகையில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் வாகனத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு என்.எல்.சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த, சொசைட்டி, நிரந்தர தொழிலாளர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம் தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது. ஆட்களை ஏற்றி செல்லும் வாகனம் இது போல் தொடர்ந்து விபத்துகுள்ளாகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் என்.எல்.சி நிர்வாகம், கடந்த 15 ஆண்டுகளாக ஓடும் வாகனங்களை நிறுத்தி விட்டு புதியதாக வாகனங்களை வாங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.