செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட் அறிவுறுத்தல்

ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் - நீதிபதி எம்.சுந்தர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை அமர்வு நீதிமன்றம் விசாரிப்பதா? சிறப்பு நீதிமன்றமா? என்ற விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதில் அமலாக்கத்துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையை நடத்தும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவுகிறது.

ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறு செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 30) அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தீர்வு காணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

அப்போது, செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டு எப்படி ஏற்பது என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மாற்று அமர்வான நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கவில்லை என்பதால் தான், இந்த அமர்வில் முறையிடுவதாகவும், நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது என தெரிவித்தார்.

ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடும்படி அறிவுறுத்தினார்.

ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்விலேயே நாளை (செப்டம்பர் 01) முறையிட உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com