'செந்தில் பாலாஜியால் தி.மு.க ஆட்சிக்கு கெட்ட பெயர்' - அன்புமணி விளாசல்

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தனும்
அன்புமணி
அன்புமணி

செந்தில் பாலாஜி போன்றவர்களால் தி.மு.க ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுவதால், தமிழ்நாடு மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள நபரை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வரவேண்டும் என பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் ஏ.எம்.ஆர் கிரிக்கெட் போட்டி கடந்த 15 தினங்களாக நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணிகளின் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி போட்டியை ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கோடை விடுமுறை காலத்தில் இளைஞர்கள் திசைமாறி போகக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது‌. இதேபோல் மற்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சுமார் 620 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

அம்பத்தூர் பகுதியில் 77 மது குடிப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இது காவல் துறையினருக்கு தெரியாமல் நடைபெறாது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள். கலைஞர் பிறந்த நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், வரவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதத்திற்கு முன்புதான் மின் கட்டணம் உயர்த்தியது அரசு. தற்போது மீண்டும் மின் கட்டணம் உயரும் என தகவல் வருகிறது. அவ்வாறு உயர்த்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக மேற்கொண்டு வருகிறது. இதே நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் தான், அணை கட்ட நிதி ஒதுக்கி, பல அரசியல் செய்தார். அவர்கள் சொல்வதை நாம் நம்ப கூடாது. கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளது.

ஆனால், நமக்கு மேட்டூர் அணை என்ற ஒன்றே ஒன்று மட்டும்தான் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தனும்.

இந்தியா முழுவதும், 40 மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 170 மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை மோடி அனுமதிக்க கூடாது. இந்தியாவிற்கு இன்னும் 10 இலட்சம் மருத்துவர்கள் தேவை இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அதிகமாக சிறுதானியம் விளைவது தருமபுரி தான், ஆனால் சிறுதானியத்தை கர்நாடகவில் வாங்குகிறார்கள். காரணம், பணம், கமிஷன் மட்டுமே.

செந்தில் பாலாஜி போன்றவர்களால் தி.மு.க ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுவதால், தமிழ்நாடு மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள நபரை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வரவேண்டும்.

ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், ரயில்வே துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புல்லட் ரயில் கொண்டு வருவதைவிட, பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, தொழில்நுட்பத்தினை கொண்டு வரவேண்டும் என்றார்.

பொய்கை. கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com