வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- 15 பேருக்கு மீண்டும் ஜெயில்

கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடுக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட திமுகவினர்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட திமுகவினர்

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்து திமுக-வை சேர்ந்த 15 பேருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 26ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட வந்தபோது, சோதனை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்கி, கார் கண்ணாடி உடைத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், பெண் அதிகாரி உட்பட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வருமான வரித்துறை அதிகாரிகளால் வழக்கு தொடங்கப்பட்டதால் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் லாரன்ஸ் மற்றும் பூபதி உட்பட திமுக-வை சேர்ந்த இந்த 15 நபர்கள் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்ட நிலையில், கரூர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் மேல்முறையீடு செய்து தங்களை தாக்கி ஆவணங்களை பறித்து சென்றதாக முறையிட்டனர். எனவே அவர்களது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என முறையிட்டனர்.

இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் 15 நபர்களின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு,இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நாடி பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரூர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆன 15 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, தொடர்ந்து கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த வழக்கானது கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் திமுகவை சேர்ந்த 13 நபர்கள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள இரண்டு நபர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 மற்றும் 2-ல் ஆஜர்ப்படுத்தப்பட்ட திமுகவினர் 15 பேருக்கும் வருகின்ற 28ஆம் தேதி வரை மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடுக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-அரவிந்த்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com