செந்தில் பாலாஜி வழக்கு: 3வது நீதிபதி காட்டிய அதிரடி - இரு தரப்பு வழக்கறிஞர்கள் காரசார வாதம்

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜி
நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை பணம் மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்நிலையில் அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பிறகு ஓமந்தூரார் மருத்துவமனை பரிந்துரைப்படி செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக ஜூலை 11ம் தேதியான நேற்று விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் (செந்தில் பாலாஜி தரப்பு) வாதம்:

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ எந்தவித ஆதாரமும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியும்’ என வாதிட்டார்.

மேலும் ‘சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட பிரிவுகளின்படி அமலாக்க துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘நீதிமன்றக்காவலில் வைக்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்க அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த உயர் நீதிமன்றம், நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது குறித்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது’ என, சுட்டிக்காட்டினார்.

மேலும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத்துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை? அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனையால் விசாரிக்க முடியவில்லை என்றால் அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்.

மருத்துவர்களிடம் சொல்லி முறையான ஏற்பாடுகளுடன் அவரிடம் விசாரணை செய்து இருக்கலாம். காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிலையில் காவலில் எடுக்காததால் முதல் 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக கருதக்கூடாது என அமலாக்கத் துறை கோர முடியாது.

ஆரம்பம் முதலே அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறியுள்ளது. சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல செயல்பட்டுள்ளது. எனவே நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது’ எனக்கூறி வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை நிறைவு செய்தார்.

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ (செந்தில் பாலாஜி தரப்பு) வாதம்:

இதைத்தொடர்ந்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என தெரிவித்துள்ளனர்.

கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து, அதனை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்தால் சட்டவிரோதம். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்தப் பிறகு, நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நிராகரித்த அமர்வு நீதிமன்றத்தின் நடைமுறை சரியானதல்ல’ என வாதிட்டார்.

அப்போது நீதிபதி, ‘கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்களை வழங்கியபோது, செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்? கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டு இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்’ என கூறினார்.

அதற்கு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பின்னர் திருத்தப்பட்டுள்ளன. இது முறைகேடு.

ஜூன் 13ம் தேதி சோதனை தொடங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். வாக்குமூலமும் அளித்தார். ஆனால் ‘செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ என அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் காவலை திரும்ப வழங்கி இருக்க வேண்டுமே தவிர காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது.

மேலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்றத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பிய மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்கவில்லை’ என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

இவ்வாறாக மேகலா தரப்பு வாதம் முடிவடையாமல் தொடர்ந்ததை அடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டு இருந்தார்.

மத்திய அரசின் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா (அமலாக்கத்துறை தரப்பு) வாதம்:

ஜூலை 12ம் தேதியான இன்று 2வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது ‘அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘கடந்த 2005ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி, காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டாலும் புலன் விசாரணை செய்வது அவசியம்.

ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்க துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணைதான். காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத் துறைக்கு புலன் விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும்.

அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்கிற மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை ஏற்றுக் கொண்டால் சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் சொத்துகளை முடக்கம் செய்ய மட்டுமே முடியும். சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு இதுவரை 333 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூற முடியாது.

வங்கி மோசடி வழக்குகளில் ரூ.19,000 கோடி பணத்தை மீட்டு வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் கைதுக்கு முன்பாக சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம்தானே தவிர அவற்றின் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது.

எனவே புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் மிகவும் அவசியமானதே. இந்த விவகாரத்தில் பலர் பணத்தை இழந்து தவிக்கிறார்கள். எங்களுடைய கடமையை செய்ய வேண்டும்.

விசாரணைக்கு அழைத்தால் வர மறுக்கிறார்கள். சம்மன் அனுப்பினாலும் விசாரணைக்கு வர மறுக்கிறார்கள். கைது செய்து விசாரிக்க வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என நான் வாதிட விரும்பவில்லை.

புலன் விசாரணை செய்ய சட்டத்தின்படி முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பினோம். ஆனால் அவர் வரவில்லை. காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டோம். உடனே மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.

பணப்பரிமாற்ற தடை சட்டப்படி சோதனை நடத்தவும், பரிந்துரை செய்யவும் முழுமையான அதிகாரம் உள்ளது. அந்த சோதனையின்போது போதிய ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சட்டத்தின் முன்பாக நிறுத்தி தண்டனை பெற்று தரவும் அமலாக்க துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

கைது நடவடிக்கை தவறாக எடுக்கப்பட்டால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத்தான் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அமலாக்கத்துறை எந்த அழுத்தத்துக்கும் உட்படுவதில்லை.

அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காகவே இதுபோன்ற கடுமையான பிரிவுகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அமலாக்கத் துறைக்கு காவல்துறைக்கான அதிகாரம் இல்லை என்று வேறொரு சூழலில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதற்காக காவலில் வைத்து விசாரிக்கும் அமலாக்கத் துறையின் உரிமையை பறிக்க முடியாது’ என, மத்திய அரசின் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இதனைஅடுத்து பதில் வாதத்துக்காக, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com