செங்கோட்டை நகராட்சி தி.மு.க நகர் மன்றத் தலைவியை பா.ஜ.க உள்ளிட்ட கவுன்சிலர்கள் சிறைவைத்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் சுயேச்சையாக ஜெயித்தவர் ராமலட்சுமி. இவர் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்களின் ஆதரவோடு சேர்மனானார்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார். இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அ.தி.மு.க பா.ஜ.க கவுன்சிலர்கள். அவரை நகர்மன்ற கூட்டம் நடத்தவிடாமல் விரட்டி விடுகிறார்கள்.
அண்மையில் திட்டக் குழு கூட்டம் நடைபெற்ற போது, சேர்ம க்கும் அ.தி.மு.க பெண் கவுன்சிலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி சண்டையில் முடிந்தது. இரு தரப்பும் பேசிய ஆபாச பேச்சை அச்சிலேற்ற முடியாது.
இதனைத்தொடர்ந்து, இருதரப்பும் போலீசில் புகார் செய்ய சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி நகர்மன்ற கூட்டம் சேர்மன் ராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 5 தீர்மானங்கள் மன்ற ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது பற்றி கவுன்சிலர்கள் யாரும் விவாதிக்காமல் சேர்மன் ராமலட்சுமியை தரக்குறைவாய் பேசினர்.
இதனால், டென்சனான தலைவி அங்கிருந்து செல்ல முயற்சித்தார். ஆனால், அ.தி.மு.க பா.ஜ.க கவுன்சிலர்கள் மன்றத்தின் கதவை பூட்டி அவரை சிறைவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ராமலட்சுமி செங்கோட்டை போலீசுக்கு தகவல் சொல்ல போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் தலைவி பின்வாசல் கதவை திறந்து கொண்டு எஸ்கேப்பானார்.
சுமார் அரை மணி நேரம் ராமலட்சுமி சிறைவைக்கப்பட்ட சம்பவம் செங்கோட்டையில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.