சித்திரை திருவிழாவில் 5 பேர் உயிரிழப்பு: ‘தி.மு.க ஆட்சியின் கையாலாகாத்தனமே காரணம்’ - செல்லூர் ராஜூ

மதுரை சித்திரைத் திருவிழாவில் 5 பேர் உயிரிழந்ததற்கு ‘தி.மு.க ஆட்சியின் கையாலாகாத்தனமே காரணம்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவில் வி.ஐ.பி-க்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏழை மக்களை பாதுகாக்க திராவிட மாடல் அரசு தவறிவிட்டதாகவும், மீனாட்சி திருக்கல்யாணத்தில் கோவில் நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ‘சித்திரை திருவிழாவில் 5 பேர் இறந்ததற்கு தி.மு.க ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் கையாலாகாத்தனமே காரணம்.

வழக்கமாக ஒரு திருவிழாவுக்கு முன்னதாக ரவுடிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். ஆனால், சித்திரை திருவிழாவுக்கு முன்னதாக ரவுடிகள் கைது செய்யப்படவில்லை. ஆற்றில் இறங்கிய மக்களை காவல் துறை முறையாக கவனிக்கவில்லை.

மதுரை சித்திரை திருவிழாவில் 250 மீட்டர் தூரத்திற்குள் 3 பேர் இறந்துள்ளனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட ரவுடிகளை தடுத்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சித்திரை திருவிழாவில் வி.ஐ.பி தரிசனத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். வி.ஐ.பி குடும்பத்தை பாதுகாக்க நினைத்து மக்களை காக்க தவறிவிட்டது காவல்துறை.

இனி இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நபர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும்.

மீனாட்சி திருக்கல்யாண விவகாரத்தில் கோவில் நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை. ஏழை எளிய மக்களால் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க முடியவில்லை. வி.ஐ.பி.க்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏழை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாததுதான் திராவிட மாடல் அரசா?

கேரளா ஸ்டோரி படத்துக்கு தி.மு.க அரசு பாதுகாப்பு அளிக்கிறது. அப்படியெனில் தி.மு.க அரசு சிறுபான்மை மக்களை பற்றி நினைக்கவில்லையா? தில்லுமுல்லு செய்தே ஆட்சி செய்யும் கட்சி தி.மு.க-தான். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய மக்களின் நலன் கருதியே ஜெயலலிதா தடை விதித்தார்’ என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com