செஃல்பி மோகத்தால் வந்த வினை - காட்டு யானையால் தாக்கப்பட்ட திருப்பத்தூர் இளைஞர்
செல்ஃபி மோகத்தால் காட்டு யானையால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கால இளைஞர்களிடையே செல்பி மோகம் அதிகரித்துள்ளது. புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்ற பயனர்களின் லைக்குகளையும் கருத்துக்களையும் திரட்டுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சவால் மிகுந்த செயல்களில் ஈடுபட்டு புகைப்படங்களை எடுக்க முயற்சிக்கிறார்கள். இதனால் இளம் தலைமுறையினர் பல இன்னல்களுக்கு உள்ளாவதையும் தொடர்ந்து பார்க்க முடிகிறது. அந்த வகையில் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்து சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் 6 நபர்களைக் கொன்று விட்டு, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தகர குப்பம் மலைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முகாமிட்டிருந்த இரண்டு யானைகளைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சிகளில் வருவாய்துறை, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தகர குப்பம் பகுதியில் இருந்து ஆத்தூர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் யானைகள் முகாமிட்டிருந்தன. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் யானையை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

அதனைத் தொடர்ந்து இன்று ஜோலார்பேட்டை அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள நிலத்தின் வழியாக இரண்டு யானைகள் சென்றதால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர். அப்போது யானைகள் இரண்டும் அப்பகுதியில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது சின்னகம்பியம்பட்டு பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் லோகேஷ் (28) என்பவர் செல்ஃபி மோகத்தால் யானையுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் இடையூறடைந்த யானை திடீரென திரும்பி தும்பிக்கையால் லோகேஷை தாக்கியுள்ளது. இதில் லோகேஷுக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லோகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக தரப்பில், “பொதுமக்கள் யானையை தொந்தரவு செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கூறி இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் யானையை கண்டவுடன் பின்னாடி ஓடுவது, செல்பி எடுப்பது, கல்லெறிவது உள்ளிட்ட சம்பவங்களை செய்து வருகின்றனர் பொதுமக்களின் இத்தகைய செயல்பாடுகளால் யானையை காட்டுக்குள் விரட்டுவதில் சிரமம் ஏற்படுறது” என கூறப்படுகிறது.