காய்கறி வியாபாரியிடம் சிறுக, சிறுக கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை, வழக்கறிஞர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் மணி(27).இவர் தனது சகோதரர் தினேஷுடன் சேர்ந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் காய்கறி, பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இவரது கடையில் கடந்த சில மாதங்களாக புஷ்பா நகரைச் சேர்ந்த வீராசாமி என்பவர் வேலை செய்து வருகிறார்.
தினமும் மணியும், தினேஷ்சும் கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி,பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் காய்கறி, பழங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுத்தபோது அதில் கள்ள நோட்டு இருப்பதாக கூறி கடைக்காரர்கள் திருப்பி கொடுத்துள்ளனர்.
பலமுறை இவர்கள் கொடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்ததும் வியாபாரிகள் அதனை கண்டுபிடித்து, திருப்பி கொடுப்பதும் வாடிக்கையாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களிடம் எப்படி கள்ள நோட்டு வந்தது என குழப்பத்தில் இருந்தனர். ஒரு கட்டத்தில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சிலர் கள்ளநோட்டுகளை கொடுத்து காய்கறிகள் வாங்கி செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும் போது ஒரு முறைக்கு இருமுறை நல்ல நோட்டு தானா என்பதை பார்த்து வாங்குமாறு கோயம்பேடு வியாபாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் இவர்களது கடையில் வியாபாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் கடைக்கு வந்த ஒரு முதியவர் 670 ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் வாங்கிவிட்டு, மூன்று புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார்.மேலும் 670 ரூபாய் போக மீதி தொகையும், ஒரு 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறையும் கேட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுகளை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் வீராசாமி, உடனடியாக கடை உரிமையாளர் தினேஷிடம் முதியவர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை காண்பித்தபோது அது கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
உடனே தினேஷ் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முதியவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பள்ளிக்கரணையை சேர்ந்த அண்ணாமலை(64), முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது.
அவர் கொடுத்த தகவலின் பெயரில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுப்பிரமணியன்(62)என்பவரை போலீஸார் கைது செய்தனர். சுப்ரமணியனின் வீட்டிலிருந்து 45 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், ஒரு கட்டிங் மெஷின் , ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், இவர்கள் கோடீஸ்வரன் என்ற பெயரில் பிரமாண்டமாக விளம்பர படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கு பணம் தேவைப்பட்டதால் கடந்த மாதம் வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள வி.கே.ஆர் அச்சகத்தில் கட்டு கட்டாக 50 லட்சம் கள்ள நோட்டுகள் அச்சடித்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து இவர்களுக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்த பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் கார்த்திகேயன் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இவர்கள் செலவு செய்த 4.20லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை சென்னை முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனரா? இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகள் அச்சடித்து மாற்றியுள்ளனர்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக், நேற்று மாலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காய்கறி கடை உரிமையாளர் மணி என்பவர் ஒருவர் 4 கள்ள நோட்டுகள் கொண்டு வந்து காய்கறி வாங்க வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
மணி கொடுத்த புகாரின் பேரில் கள்ள நோட்டு வைத்திருந்த அண்ணாமலை என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது,கள்ள நோட்டை கொடுத்தவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து, அவரது வீட்டை சோதனை செய்த போது, 90 பண்டல்களில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் என 45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பிரிண்டிங் மிஷின், பேப்பர் கட்டிங் மிஷின் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் நடத்திய புலன் விசாரணையில் இவர்கள் 5 மாதம் முன்பு வடபழனியில் உள்ள ஒரு பிரஸ்ஸில் 50 லட்சம் கள்ள நோட்டை அச்சடித்தது தெரியவந்தது. பின்னர் சுப்பிரமணி அவரது நண்பரான அண்ணாமலையிடம் கள்ள நோட்டை கொடுத்து, 5 முறை காய்கறி வாங்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.மேலும் அண்ணாமலை முன்னாள் ராணுவ வீரர் எனவும் சுப்பிரமணி வழக்கறிஞராகவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் ஒரிஜினல் நோட்டு போல பிரிண்டிங் செய்து புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பண நோட்டுகளை பெறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வங்கியில் சரிப்பார்த்து கொள்ளலாம் அல்லது காவல்துறையில் உடனடியாக புகார் அளிக்கலாம் என கூறினார். இந்த கள்ள நோட்டு புழக்கம் என்பது மிகப்பெரிய குற்றம் எனவும் பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து துணை ஆணையர் சேகர் தேஷ்முக் ஆர்.பி.ஐ அச்சடித்த ஒரிஜினல் நோட்டிற்கும், இவர்கள் அச்சடித்த கள்ள நோட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னென்ன என்பதை விளக்கி காண்பித்தார்.
காய்கறி கடையில் கள்ள நோட்டு கொடுத்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கார்த்திகேயனை கே.கே நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனியில் பிரிண்டிங் பிரஸ் வைத்து 50 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.