சீர்காழி: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

சாலையோரம் பழுதாகி நின்ற டேங்கர் லாரி மீது பேருந்து அதிவேமாக மோதியது. பின்னர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் மோதி விபத்துக்குள்ளானது.
சீர்காழி: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து -  4 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே புறவழிச்சாலையில் அரசு சொகுசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றுபோது சாலையோரம் பழுதாகி நின்ற டேங்கர் லாரி மீது பேருந்து அதிவேமாக மோதியது. பின்னர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணம் செய்த 44 பேரில் பேருந்து நடத்துனர் விஜயசாரதி உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அரசு பேருந்து நடத்துனர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இக்கோர விபத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.

விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து குருடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுச்சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com