நடிகை விஜயலட்சுமி புகார்: காவல் நிலையத்தில் மனைவியுடன் ஆஜராகி விளக்கமளித்த சீமான்!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர்
சீமான் காவல் நிலையத்தில் ஆஜர்
சீமான் காவல் நிலையத்தில் ஆஜர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார். அதையடுத்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டே நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார் கொடுத்துவிட்டு, பிறகு வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மீண்டும் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி அதிகாப்பூர்வமாக தெரிவித்தார். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை, மனதளவில் மிகவும் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். நான் வந்த நோக்கம் வேறு, இங்கு நடப்பது வேறு. சுய விருப்பத்தின் பேரிலே புகாரை வாபஸ் பெறுகிறேன். இனி இது தொடர்பாக நான் மீண்டும் வருங்காலத்தில் சென்னைக்கு வர மாட்டேன், நான் பெங்களூருவுக்கு திரும்பி செல்கிறேன். சீமான் நல்லா இருக்கட்டும் என்று நடிகை விஜயலட்சுமி பேசியிருந்தார்.

காவல் நிலையம் முன் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர்
காவல் நிலையம் முன் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர்

இந்நிலையில் புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கிய நிலையில், சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருடன் அவர் மனைவி கயல்விழி வழக்கறிஞர் என்ற முறையில் வந்திருந்தார். காவல் துறையினரிடம் புகார் தொடர்பாக விளக்கம் கொடுக்க வந்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், "2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். நடிகை விஜயலட்சுமி என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவர்கள் சொன்ன புகாருக்கு எல்லாம் காவல் துறையில் வந்து சான்று வழங்க வேண்டும். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது" என்று பேசினார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தன் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகத் தந்திருந்த புகாருக்காக காவல்துறையிடம் விளக்கமளிக்க இன்று காவல்நிலையம் வந்திருந்த சீமானுக்கு காவல் அரணாக அவருடைய தொண்டர்கள் திரண்டு அரசியல் போராட்டத்துக்காக வந்ததைப் போல காத்திருந்து குரல் கொடுத்து பத்திரமாக திரும்ப அழைத்துச் சென்றது ரொம்பவுமே வித்தியாசமான காட்சி!

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com