நெல்லை டவுனில் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சி.எஸ்.ஐ டயோசீசால் நிர்வகிக்கப்பட்டு வரும் இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கிறார்கள்.குறிப்பாக டவுனை சுற்றி உள்ள கிராமத்து மாணவ மாணவியருக்கு இப்பள்ளி ஒரு வரப்பிரசாதம்.
இந்த நிலையில், கடந்த 8ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கூடம் நடைபெற்றது. மாலை 4.10 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் மாணவ,மாணவியர் ஊருக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் நின்றுக்கொண்டிருந்தனர். அதில் இரு சமுதாய மாணவர்களும் அடக்கம். அப்போது திடீரென அவர்களுக்குள் சாதிய மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கம்புகளாலும் தாக்கிக் கொண்டனர். மாணவர்கள் மோதிக்கொண்ட இடம் மெயின் ரோடு என்பதால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. உடனடியாய் ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் மாணவர்களின் சண்டையை விலக்கி விட்டனர். தலையில் ரத்தம் வழிய ரோட்டோரம் விழுந்து கிடந்த இரண்டு மாணவர்களை உடனடியாய் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இது குறித்து டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராமையா நம்மிடம் கூறுகையில், ”இரு தரப்பு மாணவர்களிடையே கடந்த இரண்டு மாத காலமாகவே பிரச்சினை புகைந்து கொண்டிருந்திருக்கிறது. பஸ்ஸில் இடம் பிடிப்பதில்தான் தகராறு ஏற்பட்டு சாதிய மோதலாய் உருவெடுத்திருக்கிறது.தற்போது 10 மாணவர்களைப் பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு போனோம். அவர்களின் பெற்றோர்களை வரவழைத்தோம். அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பையன்களுக்கு அட்வைஸ் சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்த முறை சாதிய மோதலில் ஈடுபட்டால் பள்ளிக்கு முழுக்கு போட வேண்டியதிருக்கும் என்று கடுமையாய் வார்ன் பண்ணி அனுப்பியிருக்கிறோம்” என்றார்.