கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வாரம் தனது 19-வது வயது பிறந்தநாளை சக மாணவிகளுடன் உற்சாகமாக கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாடிய ஒரு சில தினத்தில் தோழியை பார்த்து வருவதாக வீட்டில் கூறி சென்ற மாணவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மாணவி படித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாயமான மாணவியின் தோழியிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
மாயமான மாணவிக்கும், 32 வயதான ஆங்கில ஆசிரியர் ராஜன் ஆண்டனி போஸுக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததாலும், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டும், தங்கள் காதலை ரகசியமாக வைத்துள்ளனர். இவர்களது காதலை மாணவியில் தோழிகளும் அறிந்து வைத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மாணவிக்கு 19-வது வயது பிறந்து விட்டதால் அவரது பிறந்தநாளை ஆசிரியருடன் சக மானவிகளும் கொண்டாடியுள்ளனர். அடுத்த நாள் அந்த மாணவி ஆசிரியருடன் ஓட்டம் பிடித்துள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததாலும், செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததாலும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியின் தோழிகளிடம் நடத்திய விசாரணையில், தங்கள் மகள் ஆசிரியரை காதலித்து வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை ஆசிரியர் கடத்திச் சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது, மாயமான மாணவி, ஆசிரியருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை நாகர்கோவில் அழைத்துவர போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பயனாக மாணவியும் ஆசிரியரும் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் நிலையம் வந்த அவர்கள் மகளை பார்த்து கதறி அழுதனர். படிக்க வேண்டிய வயதில் திருமணம் வேண்டாம் என கூறினர். ஆனால் மாணவி அதனை கேட்கவில்லை. அவர் ஆசிரியருடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.
இதற்கிடையில் அவர்கள் 2 பேரும் மேஜர் என ஆசிரியரின் நண்பர்கள் பேசினர். இந்த நிலையில் ஆசிரியரின் பெற்றோரும் போலீஸ் நிலையம் வந்தனர். பின்னர் இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலில் படிக்க வைப்பதாகவும், அதன் பின்பு ஆசிரியருக்கே திருமணம் செய்து வைப்பதாகவும் மாணவியின் வீட்டார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடக்கும் வரை மகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். இதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசாரிடம் கடிதம் எழுதி கொடுத்தனர். அதன்பிறகு மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடன் மாணவி ஓட்டம் பிடித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.